கட்டுரை

 

வில்லுப்பாட்டின் கதையமைப்பும் இசைக்கருவிகளும்

ஆய்வுச் சுருக்கம்

வில்லுப்பாட்டு, வில்லடி, வில்லு, வில்லடிச்சான் பாட்டு என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் வில்லுப்பாட்டின் முக்கிய அங்கமாக திகழும் வில்லானது ஆரம்ப காலக்கட்டத்தில் முற்றிலும் பனை மரத்தாலேயே செய்யப்பட்டது. நடுவில் தடிமனாகவும், இரண்டு ஓரத்தில் மெலிந்தும் காணப்படும் இந்த வில்லின் ஓரங்களில் நாண் ஏற்றப்பட்டு, மணிகள் தொங்கவிடப்பட்டு இசைக்கப்படுகிறது. இந்த வில்லுடன், கடம், ஜால்ரா போன்றவை பக்க வாத்தியமாக இருந்தாலும், பாடுபவரின் குரலை உச்சஸ்தாயிலுக்கு கொண்டு சென்று மேடையை தெய்வீகமயமாக்கியது உடுக்கை என்ற இசைக்கருவிதான். ஆனால், தற்போது அரங்கேற்றப்படும் வில்லுப்பாட்டில் உடுக்கை பயன்படுத்துவது இல்லை மாறாக தபேலா, ஆர்மோனியம், பம்பை போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த வில்லுப்பாட்டுக் கலையம்சம் குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது.

முன்னுரை

வில்லிசை, வில்லுப்பாட்டு, வில்லடிச்சான் பாட்டு, விற்பாட்டு என்ற பெயர்களில் வழங்கும் இக்கலையானது பதினைந்தாம் நூற்றாண்டில் அரசப் புலவர் என்பவர்தான் தோற்றுவித்ததாகச் சோமலே குறிப்பிடுகிறார். தமிழகத்தின் நிகழ்த்துக் கலைகளுள் தெருக்கூத்தும் வில்லுப்பாட்டும் குறிப்பிடத்தக்கன. வட மாவட்டங்களில் தெருக்கூத்து என்றால் குமரி, நெல்லை, தூத்துக்குடி, முகவை போன்ற தென் மாவட்டங்களில் வில்லுப்பாட்டு புகழ்பெற்றதாகும். 

வில்லுப்பாட்டு அமைப்பு

கோவில்களில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட உடன் சுவாமியின் கருவறைக்கு எதிராகத் தனி மேடை அமைக்கப்படும். அந்த மேடையில் தேவையான ஒளி மற்றும் ஒலி அமைப்பு செய்யப்படும். அந்த மேடையில் அமர்ந்துதான் வில்லிசை கலைஞர்கள் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை வழங்குவார்கள். இந்த வில்லுப்பாட்டு நிகழ்ச்சி மேடையில் குறைந்தது ஐந்து முதல் ஆறு கலைஞர்கள் இருப்பார்கள். இவற்றில் பாடல் பாடும் தலைமை புலவர், அண்ணாவி கலைஞர் ஆகியோருடன் பக்க வாத்திய கலைஞர்களும் உண்டு. தலைமை புலவர் பாடும் பாடல் வரிகளை அவர் கூறியது போலவே திருப்பிப் பாடும் கலைஞர் தான் அண்ணாவி என்று அழைக்கப்படுகிறார். இதில் ஒருவர் நகைச்சுவை கேள்விகளை கேட்டுக்கொண்டே இருப்பார். ஒருவர் ஆமாம் என்று சொல்லிக்கொண்டே சிலேடை கேள்விகளை கேட்பார். மற்றவர்கள் இசைக்கருவிகளை இசைக்க ஒருவர் முக்கியக் கதையை பாட்டோடு இசைத்து பாடுவார். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரவர் பணியை சிறப்பாகச் செய்வதன் மூலம் தான் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி வெற்றி பெறும்.

கதை வடிவங்கள்

வில்லுப்பாட்டுக் கதைகள் பல்வேறு வடிவங்கள் கொண்டவை. மரபு வழிக்கதைகள் முதல் தற்கால நிகழ்வுகள் வரை எதனையும் வில்லுப்பாட்டுக்கான கதையாகக் கொள்ளலாம்.

Ø  தொன்மைக் கதைகள்

Ø  நாட்டுப்புறக் கதைகள்

Ø  தெய்வக் கதைகள்

Ø  சமுதாயக் கதைகள்

Ø  வரலாற்று வீரர் கதைகள்

Ø  நடப்பியல் நிகழ்வுகள்

மக்களின் உணர்ச்சியோடு ஒன்றி வளர்ந்த கலையாகத் திகழும் வில்லுப்பாட்டு, மரபு வழிக் கதைகள் தொடங்கி இன்றைய அறிவியல் வளர்ச்சி நிலைகள் வரைகதையின் கூறாகக் கொண்டு பாடப்படுகிறது. எந்தக் கால அளவுக்கும் ஏற்றபடி ஒரு கதையினை நாடக வடிவில் படித்துக்காட்டக்கூடிய இந்த வில்லுப்பாட்டு கேட்போர்களின் செவிகளுக்கு விருந்தாக அமைகிறது.

வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் கிராமிய தெய்வங்களான சங்கிலி பூதத்தார் கதை, கருப்பசாமி கதை, மாடத்தி அம்மன் கதை, முப்பிடாதி அம்மன் கதை, இசக்கியம்மன் கதை, பெரியசுவாமி கதை, பேச்சியம்மன் கதை, சாஸ்தா பிறப்பு கதை, பட்டவராயர் கதை, பொம்மக்கா - திம்மக்கா கதை, தளவாய் மாடசாமி கதை சுடலைமாடன் கதை, நீலி கதை, முத்துப்பட்டன் கதை, சின்ன நாடான் கதை, தோட்டுக்காரி அம்மன் கதை, ஐவர் ராசாக்கள் கதை, கான்சாகிபு போர், கட்டபொம்மன் கதை, காந்திமகான் கதை போன்ற எண்ணற்ற தெய்வங்களின் கதையோடு அரிச்சந்திரன் கதை, சத்யவான் - சாவித்திரி கதை, இராமாயணக் கதை, மகாபாரதக் கதை போன்ற இதிகாசங்களின் கதையும் நம் நாடு சுதந்திரம் பெற்ற வரலாற்று கதை வரை அனைத்தும் கதையின் கூறாகக் கொண்டு பாடப்படும்.

புகழ்பெற்ற வில்லிசைக் கலைஞர்கள்

வில்லுப்பாட்டானது மக்களது உள்ள உணர்ச்சியோடு ஒன்றி வளரும் கலையாக உள்ளது. இத்தனை சிறப்புகள் பெற்ற இந்த வில்லுப்பாட்டுக் கலையில் புலிக்குட்டி புலவர், தோவாளை சுந்தரம் பிள்ளை, என்.எஸ். கிருஷ்ணன், யாழ்ப்பாணம் சின்னமணி, சொக்கல்லோ சண்முகநாதன், நாச்சிமார் கோவிலடி ராஜன், கலைமாமணி கோவில்பட்டி முத்துசாமி தேவர், கலைமாமணி விளாத்திகுளம் ராஜலக்ஷ்மி, பூங்குடி ஆறுமுகம், கலைமாமணி சுப்பு ஆறுமுகம் ஆகிய கலைஞர்கள் புகழ் பெற்று திகழ்ந்தார்கள்.

இசைக்கருவிகள்

வில்லுப்பாட்டு நிகழ்ச்சியின் முக்கிய இசைக்கருவி வில்லு தான். இதோடு வில்லுக்குடம், வீசுகோல், உடுக்கை, தாளம், கட்டை ஆகிய கருவிகள் முற்காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்காலத்தில் இவற்றோடு தபேலா, மண்டிலோ, பம்பை, ஹார்மோனியம் ஆகிய கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

 வில்

வில்லுப்பாட்டின் முதன்மைக் கருவியாக விளங்குவது வில் ஆகும். இது வைரம் பாய்ந்த பனைமரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது.நன்கு வில் வடிவத்தில் வளைக்கப்பட்ட இது வில் கதிர் என்று அழைக்கப்படுகிறது. இந்த வில் கதிரின் இரு முனைகளிலும் சிறு குப்பிகள் தொங்கவிட பெற்றிருக்கும். இந்த வில் கதிரின் இரண்டு முனைகளும் ஒன்றோடு ஒன்று இழுத்து தகுந்த கயிறால் கட்டப்பட்டிருக்கும். இதில் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒலியெழுப்பக்கூடிய சிறு சிறு சலங்கை மணிகள் தொங்கவிடப்பட்டிருக்கும். இந்த மணிகளின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்க வேண்டும் என்பது மரபாகக் கருதப்படுகிறது. இதனால் பெரும்பாலும் 11 மணிகள் இதில் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த வில் கதிரின் நடுப்பாகமானது வில்லுக்குடத்தின் நடுப்பாகத்தோடு இணைத்து, நாண் - வடம் என்று சொல்லக்கூடிய கயிற்று பகுதி மேல்புறமாகவும், வில் கதிர் என்று அழைக்கப்படும் பகுதி கீழ்புறமாகவும் இருக்கும் வண்ணம் கட்டப்பட்டிருக்கும். இந்த மொத்த அமைப்பும் சேர்ந்து தான் வில் என்று அழைக்கப்படுகிறது.

வீசுகோல்

வீசுகோல் எனப்படும் கருவியானது சிறு கைப்பிடி கொண்ட குச்சி போலக் காணப்படும். இதனை வில்லுப்பாட்டு படிக்கும் தலைமை புலவர் தனது கைகளில் வைத்திருப்பார். பாட்டு பாடும் போது இந்த வீசுகோலினை கொண்டு தான் புலவர் வில்லில் உள்ள நாண் மீது தட்டி தாளத்திற்கு ஏற்றபடி இசை எழுப்புவார்.

உடுக்கு

வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் சிறப்பிடம் பெரும் கருவியாகத் திகழ்வது உடுக்கு. இந்த உடுக்கு என்னும் கருவி மூலம் தான் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் உச்சகட்ட இசை வெளிப்படுத்தப்படும். இந்த உடுக்கு என்னும் கருவி உடுக்கையின் சிறிய வடிவம் ஆகும். இதனால் இதை சித்துடுக்கை என்றும் அழைக்கப்படுகிறது. தெய்வீக கதைகள் படிக்கும் போது இந்த உடுக்கின் ஒலி அதிகளவில் பயன்படுத்தப்படும்.

வில்லுக்குடமும் கட்டையும்  

வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும் மற்றோரு முக்கியமான கருவி வில்லுக்குடம். இது மண்ணால் செய்யப்பட்ட குடம் ஆகும். இந்த வில்லுக்குடம் விளிம்பு இல்லாத வாய் பகுதியைக் கொண்டிருக்கும் வகையில் தனி வடிவமைப்புடன் மண்ணினால் செய்யப்படும். இந்த மண்குடத்தை மேடையில் புரியணை மீது வைத்து நிறுத்தி வில்லுடன் கட்டியிருப்பார்கள். மண்குடத்தை நிலத்தில் பாதுகாப்பாக நிற்க வைக்கப் பயன்படுத்தப்படும் வைக்கோலால் செய்யப்பட்ட வளையத்திற்கு தான் புரியணை என்று பெயர். இந்த வில்லுக்குடம் மீது தட்ட கட்டை மற்றும் பத்தி ஆகிய மரத்தால் செய்யப்பட்ட கட்டைகள் பயன்படுத்தப்படும். இதில் கட்டை கொண்டு மண்குடத்திலும், பத்தி கொண்டு குடத்தின் வாய்ப்பகுதியிலும் தட்ட தகுந்த இசை பிறக்கும்.

தாளம்

தாளம் என்பது இரண்டு பித்தளை அல்லது வெண்கலத்தால் ஆன வட்ட வடிவ தட்டுகள் கயிற்றால் இணைக்கப்பட்ட இசைக்கருவி ஆகும். இந்த இரண்டு வட்டவடிவ தட்டுகளை ஒன்றின் மேல் ஒன்று வைத்துத் தட்டும் போது இசை பிறக்கும். இந்தத் தாளத்தின் இசையும் வில்லுப்பாட்டில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த அனைத்து இசைக்கருவிகளும் கூட்டாக இசைக்கப்பட்டு தான் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெறும். பொதுவாக இந்த நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன்னர் வில்லிசை கலைஞர்கள் அனைவரும் மேடையில் தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வழிபாடு செய்வார்கள். இதற்குப் பின்னர் அவரவர் இடங்களில் அமர்ந்து இசைக்கருவிகளை மேடையில் நிறுத்தி, தங்கள் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியைத் தொடங்குவார்கள்.

வில்லிசை கலைக்கென்று ஏதும் தனிப்பட்ட பயிற்சி எல்லாம் கிடையாது. பாடல் பாடும் முறையோ, சங்கீத சுவரங்களின் வரிசையோ இல்லாமல் பயிற்சியில்லாத சொந்த குரலில் தான் புலவர்கள் பாடுவார்கள். இது கேட்பதற்கு ரசிக்கும் வகையில் பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கிராமிய தெய்வங்களின் வரலாற்றோடு, அரிச்சந்திரன் கதை, கண்ணகி கதை, சத்யவான் - சாவித்ரி கதை போன்ற கதைகளும் பொருளாக வைத்துப் பாடப்படும். பாட்டுடன் கூடிய வாய்ப்பேச்சு முறையில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி அமையும் என்பதால் கிராமத்து மக்கள் மிகவும் சுவாரசியமாக இந்த நிகழ்ச்சியை ரசித்துக் கேட்கிறார்கள்.

பொதுவாகக் கிராமங்களில் அமையப்பெற்றுள்ள கிராமிய தெய்வங்களின் கோவில்கள் மற்றும் சாஸ்தா கோவில்கள் ஊருக்கு ஒதுக்குபுறமாகக் காட்டு பகுதியில் தான் அமைந்திருக்கும். மேலும் இங்கு நடைபெறும் கொடை விழாவில், நள்ளிரவு வேளையில் தான் சாமக்கொடை என்னும் நிகழ்ச்சி நடைபெறும். இதனால் காட்டு விலங்குகள் கோவில் பகுதிக்கு வராமல் இருக்கும், நள்ளிரவு நடைபெறும் சாமக்கொடை வரை பக்தர்கள் விழித்திருக்கவும் இந்த வில்லுப்பாட்டு நிகழ்ச்சி கோவிலில் வைக்கும் வழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பொதுவாகக் கோவிலில் இந்த நிகழ்ச்சி விழா நாளன்று மாலையில் தொடங்கி மறுநாள் காலை வரை விடிய விடிய நடைபெறும். தற்போது கால மாற்றத்தால் சுருங்கிய இந்த நிகழ்ச்சி ஐந்து மணி நேரம் முதல் ஆறு மணி நேரம் வரை நடைபெறுகிறது.

            வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் நடைபெறும் நிகழ்வுகளை பொதுவாக ஏழு பருவங்களாகப் பிரித்து கொள்ளலாம். அந்த ஏழு பருவங்கள் குறித்து பின் வருமாறு காணலாம்.

1. காப்பு பருவம்: இந்தக் காப்பு பருவத்தில் தாங்கள் வணங்கும் தெய்வங்களை தங்கள் நிகழ்ச்சிக்கு வந்து துணையாக நிற்கும்படி வேண்டிக்கொள்ளும் வகையில் பாடல் பாடப்பெறும். பொதுவாக முழுமுதற்கடவுள் விநாயகர் தொடங்கி, கலைகளுக்கு அதிபதியான சரஸ்வதி தேவி வரை இந்தக் காப்பு பருவத்தில் போற்றி பாடல்கள் பாடப்படும்.

காப்பு பாடல் உதாரண வரிகள்: ‘தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட வந்திடுவாய் கணபதியே ’ என்று தொடங்கும்.

2. வருபொருள் உரைத்தல் பருவம்: இந்தப் பருவத்தில் அன்றைய நிகழ்ச்சியில் பாடப்போகும் தெய்வத்தைப் பற்றியோ அல்லது பாடப்பெறும் கதைகளை பற்றியோ அவற்றின் சிறப்பம்சங்களுடன் முன்னுரையாகக் கூறி பாடப்படுவதாகும்.

3. குருவடி தொழுதல் பருவம்: இந்தப் பருவத்தில் வில்லிசை கலைஞர்கள் தங்களுக்கு கலையைக் கற்றுத்தந்த தங்களின் குருவைப் போற்றி பாடல்கள் பாடி மரியாதையை செய்வார்கள்.

4. அவையடக்கம் பருவம்: இந்தப் பருவத்தில் கதை கூறும் தங்களை ஒரு எளிய மனிதனாகப் பாவித்து, கதை கேட்கும் ரசிகர்களை பெரிய சான்றோராக பாவித்துத் தன்னடக்கத்துடன் பாடல்கள் பாடப்படும். இதில் தாங்கள் நிகழ்த்தப் போகும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் ஏதேனும் குற்றங்கள் அல்லது பிழைகள் இருந்தால் பொறுத்துக்கொள்ளும்படியும் வேண்டுதல் செய்யப்படும்.

5. நாட்டு வளம் கூறும் பருவம்: இந்தப் பருவத்தில் அந்தந்த பகுதியின் நாடு வளங்கள் மையமாக வைத்துப் பாடல்கள் பாடப்படும். குறிப்பாக இந்த வில்லுப்பாட்டு பிரபலமான தென் மாவட்டங்கள் பாண்டிய நாட்டின் எல்லைக்குள் வரும் என்பதால் பாண்டிய நாட்டின் பெருமைகள் பற்றிப் பாடப்படும்.

6. கதைக்கூறு பருவம்: இந்தப் பருவத்தில் தான் முக்கியமான கிராம தெய்வத்தின் கதை அல்லது அன்று படுக்கப்போகும் இதிகாச கதைகள் பாடல்களுடன் கூடிய வாய்ப்பேச்சாக நிகழ்த்தப்படும். இது தான் இந்த வில்லுப்பாட்டு நிகழ்ச்சியின் முக்கியமான பகுதியாகக் கருதப்படுகிறது.

7. வாழ்த்து பாடுதல் பருவம்: இந்தப் பருவத்தில் இறுதியாகச் சபையில் கூடியிருந்து தங்கள் நிகழ்ச்சியை ரசித்துக் கேட்ட மக்கள் அனைவரையும் பல்லாண்டு வாழ வாழ்த்தும் வகையில் பாடல்கள் பாடப்படும்.

வில்லுப்பாட்டு குறித்த தகவல்கள்

திருநெல்வேலிச் சீமையில் உள்ள கிராமங்களில் வில்லடிச்சான் கோவிலிலே விளக்கேத்த நேரமில்லையாம், குடமாடிச்சான் கோவிலிலே குத்துவிளக்கேத்த நாதியில்லையாம் என்ற பழமொழி பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுகிறது. அதற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான நிகழ்வு கூறப்படுகிறது. முன்னர் ஒரு கிராமத்தில் கோவில் கொடை விழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது, வில்லிசை கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்ததாம். இரவில் ஆரம்பித்த வில்லிசை கலை நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமாக நள்ளிரவு தாண்டிச் சென்று கொண்டிருக்க, கூடியிருந்த பக்தர்கள், கோவில் நிர்வாகிகள், ஊழியர்கள் என அனைவரும் தங்களை மறந்து நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நள்ளிரவு தாண்டியும் மிகவும் உற்சாகமாகச் சென்று கொண்டிருந்த வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் மூழ்கியிருந்த அனைவரும், கோவில் சன்னதியில் ஏற்றப்பட்டிருந்த தீப விளக்குகள் எண்ணை இல்லாமல் அணைந்து, திரி கருகி விட்டதை கூடக் கவனிக்காமல் இருந்தார்கள். இதனை வில்லுப்பாட்டு நிகழ்ச்சியின் புலவர் பார்த்து விட, அவர் உடனே நகைச்சுவை கலந்த தொனியில் தான் பாடிய வில்லுப்பாட்டின் மூலம் ‘வில்லடிச்சான் கோயிலிலே விளக்கேத்த நேரமில்லை ஆமா நேரமில்லை, குடமடிச்சான் கோயிலிலே, குத்துவிளக்கேத்த நாதியில்லை அம்மா நாதியில்லை’ என்று உருக்கமாகப் பாடுகிறார். இதன் ரசனையில் மயங்கியிருந்த பக்தர்கள் அப்போதுதான் நிலைமையை உணர்ந்து உடனே கோவிலுக்குள் சென்று தீப விளக்கில் எண்ணையை ஊற்றி, தீபத்தைத் தூண்டி விடுகிறார்கள். அன்று நடந்த இந்த நிகழ்வின் தாக்கத்தால் பாடப்பட்ட பாடலின் வரிகளே திருநெல்வேலி வட்டாரத்தில் பழமொழியாகப் பேசப்பட்டு வருகிறது.

தொகுப்புரை

மக்களின் உணர்ச்சியோடு ஒன்றி வளர்ந்த கலையாகத் திகழும் வில்லுப்பாட்டு, மரபு வழிக் கதைகள் தொடங்கி இன்றைய அறிவியல் வளர்ச்சி நிலைகள் வரைகதையின் கூறாகக் கொண்டு பாடப்படுகிறது. எந்தக் கால அளவுக்கும் ஏற்றபடி ஒரு கதையினை நாடக வடிவில் படித்துக்காட்டக்கூடிய இந்த வில்லுப்பாட்டு கேட்போர்களின் செவிகளுக்கு விருந்தாக அமைகிறது. வில்லுப்பாட்டிற்குத் துணைபுரியும் இசைக்கருவிகள் உடுக்கை, பம்பை தாளம், ஆர்மோனியம், தவில், மிருதங்கம், தபேலா, குழ்ல், மோர்சிங், குடம், கட்டை போன்றவற்றைப் பயன்படுத்தி இசையோடு பாட்டிசைத்து மக்களை மகிழ்விக்கிறார்கள். இந்நிகழ்வானது குறிப்பாக மாசி மாதம் முதல் ஆடி மாதம் வரை அதிக அளவில் நடைபெறுகிறது. வில்லுப்பாட்டில் மக்களின் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், வாழ்வியற் கூறுகள், பாலுணர்வு கலந்த நகைச்சுவை, வர்ணனை, அங்கதம் ஆகிய கூறுகள் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் இழையோடுவது இயல்பானதாகும். வில்லிசையை கோயில் சார்ந்து நடத்தும் வேளையில் உடல் தூய்மை, உள்ளத் தூய்மையினை கடைப்பிடிப்பது கூடுதல் சிறப்பாகும்.

துணைநூற் பட்டியல்

1.    அழகேசன்,சு.,சண்முக சுந்தரம்.சு., திருநெல்வேலி வட்டாரத் தெய்வங்கள், காவ்யா பதிப்பகம், டிரஸ்புரம், கோடம்பாக்கம், சென்னை – 600024, 2009.

2.    இராமசுவாமி.மு., தோற்பாவைக்கூத்து, பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 625021, 1983.

3.    எழிலவன்,ப.ஆ., தமிழகத்தில் மரபுக் கலைகள், ப்ளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், ஆலந்தூர், சென்னை – 600016,2010.

4.    கட்டளைக் கைலாசம், கழியல் ஆட்டம்: நிகழ்த்துக்கலை, காவ்யா பதிப்பகம், டிரஸ்புரம், கோடம்பாக்கம், சென்னை – 600024, 2015. 

5.    சண்முக சுந்தரம்,சு., நெல்லை நாட்டுப்புறக் கலைகள், காவ்யா பதிப்பகம், டிரஸ்புரம், கோடம்பாக்கம், சென்னை – 600024, 2015.

Comments

Popular posts from this blog

நிறுத்தற்குறிகள்